அசுரன் நிஜ சம்பவம் மகனுக்காக தந்தை ஓட ஓட விரட்டிக் கொலை..! பேனரை கிழித்ததால் வந்த வினை
தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு எதிரே வைக்கப்பட்ட ஒரு தலைவரின் டிஜிட்டல் பேனரை கிழித்த மகனின் வில்லங்க செயலால் , விடுதலை சிறுத்தை பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட விபரீதம் அரங்கேறி இருக்கின்றது.
தூத்துக்குடி 3 சென்ட் பகுதியை சேர்ந்தவர் கறிக்கடை ஊழியர் மாரிமுத்து. விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகராக இருந்தார்.
இவரது மகன் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்
இந்நிலையில் 3 சென்ட் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சிலை எதிரே கடந்த 30 ந்தேதி அதே பகுதியை சேர்ந்த முகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு தலைவரின் டிஜிட்டல் பேனரை அவரது படத்துடன் வைத்துள்ளனர்.
இந்த டிஜிட்டல் போர்டை மாரிமுத்துவின் மகன் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாரிமுத்து மற்றும் முகேஷின் ஆதரவாளர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் இரு தரப்பையும் அழைத்து சமரசம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முகேஷ் தலைமையிலான கும்பல், விசிக பிரமுகர் மாரிமுத்துவின் வீட்டிற்கு சென்று பயங்கர ஆயுதங்களால் மாரிமுத்துவை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்துள்ளது. தடுக்க வந்த மாரிமுத்துவின் மகனையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.
இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவன் பலத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த படுகொலை தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியகொலை கும்பலை தேடி வருகின்றனர்.
டிஜிட்டல் போர்டை கிழித்ததை காரணம் காட்டி அசுரன் படம் பாணியில் நிகழ்ந்த படுகொலை சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, வெட்டிக்கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், கொலையாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் இழப்பிடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments